5,000 கன அடி தண்ணீர் என்பது மிகவும் குறைவு - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தமிழக அரசு முடிவு


5,000 கன அடி தண்ணீர் என்பது மிகவும் குறைவு - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தமிழக அரசு முடிவு
x
தினத்தந்தி 29 Aug 2023 2:39 PM GMT (Updated: 29 Aug 2023 4:29 PM GMT)

காவிரியில் இருந்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்கள் செப்.12-ம் தேதி வரை வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவை ஏற்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 நாட்களுக்கு 5,000 கன அடி தண்னீர் என்பது மிகவும் குறைவு என சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு செய்துள்ளதாக தமிழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

10 நாட்களுக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் 3,000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா தெரிவித்த நிலையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.


Next Story