52 அரசு பஸ்கள் மஞ்சள் நிறத்துக்கு மாறுகின்றன
நாகர்கோவில் மண்டலத்தில் 52 அரசு பஸ்கள் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது என்று அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மண்டலத்தில் 52 அரசு பஸ்கள் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது என்று அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய நிறம்
தமிழகம் முழுவதும் திருநெல்வேலி, மதுரை என 8 கோட்டங்களாக அரசு போக்குவரத்துக்கழகம் செயல்பட்டு வருகிறது. இது தவிர அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தனியாக தொலைதூர பஸ்களை இயக்கி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பஸ்கள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது.
மகளிருக்கு கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையிலான பஸ்களை அடையாளம் காணும் வகையில் முன்னும், பின்னும் பிங் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு பஸ்களுக்கு அடர்த்தியான மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திலும், நீல வண்ணத்தில் பட்டை மற்றும் எழுத்துகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
96 பழைய பஸ்கள் புதுப்பிப்பு
தமிழக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் ஆயிரம் புதிய பஸ்களை வாங்க நிதி ஒதுக்கி உள்ளது. மேலும் மிகவும் பழமையான பஸ்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் மஞ்சள் நிறத்தில் விரைவில் இயக்கப்பட உள்ளன. அந்தவகையில் குமரி மாவட்டத்துக்கு 56 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது.
மேலும் 96 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்பட இருக்கிறது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட அதாவது புதிய பாடி கட்டப்பட்ட 2 பஸ்கள் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த 2 பஸ்களும் அடர்த்தியான மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்- திருநெல்வேலி என்ற எழுத்துகள் நீல நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் எழுதப்பட்டுள்ளது. பஸ்சை சுற்றிலும் உள்ள பட்டை நீல நிறத்திலும் உள்ளன. பஸ்சின் இருக்கைகள் என்ட் டூ என்ட் பஸ்களைப் போன்று குஷன் இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 பஸ்களும் விரைவில் குமரி மாவட்டத்தில் இயக்கப்பட உள்ளன.
56 புதிய பஸ்கள்
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருநெல்வேலி கோட்டத்துக்கு 113 புதிய பஸ்கள் வர இருக்கிறது. அதில் நாகர்கோவில் மண்டலத்துக்கு 56 புதிய பஸ்கள் வழங்கப்பட இருக்கிறது. இதுவரை புதிய பஸ்கள் வரவில்லை. 96 பழைய பஸ்களுக்கு பாடி (கூண்டு) கட்ட திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக 20 பழைய பஸ்களின் சேஸ்கள், பாடி கட்டுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 2 பஸ்கள் பாடி கட்டி வந்துள்ளது. இன்னும் 10 பஸ்கள் பாடி கட்டி தயார் நிலையில் உள்ளது. மீதமுள்ள 8 பஸ்களுக்கும் பாடி கட்டி முடித்ததும், மேலும் 20 பழைய பஸ்களின் சேஸ்கள் அனுப்பி வைக்கப்படும். சேஸ்களை அனுப்ப, அனுப்ப பாடி கட்டி தருவார்கள். கொஞ்சம், கொஞ்சமாக பாடி கட்ட பழைய பஸ்களின் சேஸ்களை அனுப்பினால் தான் மக்களுக்கு பாதிப்பின்றி பஸ் போக்குவரத்தை இயக்க முடியும். ஒரே நேரத்தில் அனுப்பி வைத்தால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும்.
மஞ்சள் நிறம்
நாகர்கோவில் மண்டலத்தில் 52 அரசு பஸ்கள் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது என்று அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு, திருச்சி, மதுரை, கரூர் போன்ற பகுதிகளில் பாடி கட்டும் பணிகள் நடைபெறுகிறது. பழைய பஸ்களுக்கு புதிதாக பாடி கட்டும் 96 பஸ்களில் மபசல் பஸ்கள் 52 பஸ்கள் மஞ்சள் நிறமாக மாற்றப்பட இருக்கிறது. தற்போது பாடி கட்டி வந்து சேர்ந்துள்ள 2 பஸ்களும் மஞ்சள் நிறத்தில்தான் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.