ஜல்லிக்கட்டில் 527 காளைகள் சீறிப்பாய்ந்தன
ஜல்லிக்கட்டில் 527 காளைகள் சீறிப்பாய்ந்தன.
கீழப்பழுவூர்:
ஜல்லிக்கட்டு
அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு ஊரின் நடுவே உள்ள தெருவில் வாடிவாசல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, சின்னப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.
ஜல்லிக்கட்டில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, பரிசு பெட்டகம், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
32 பேர் காயம்
முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தகுதியான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 8.40 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.10 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 527 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்க 166 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். காளைகள் முட்டியதில் 23 மாடுபிடி வீரர்கள், 9 பார்வையாளர்கள் என மொத்தம் 32 பேர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த 2 பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜல்லிக்கட்டை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மின்சாரம் பாய்ந்து வாலிபர் கீழே விழுந்த படுகாயம்
ஜல்லிக்கட்டை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர். இதில் ஏலாக்குறிச்சியை சேர்ந்த பரத்(வயது 20) ஜல்லிக்கட்டு நடந்த திடல் அருகே உள்ள வீட்டின் மாடியில் ஏறி, அங்கு நின்றபடி ஜல்லிக்கட்டை செல்போனில் புகைப்படம் எடுத்தார். அப்போது திடீரென நிலை தடுமாறியதில், அருகே சென்ற மின்கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர், மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடனடியாக பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.