மக்கள் நீதிமன்றம் மூலம் 528 வழக்குகளுக்கு தீர்வு
நீலகிரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 528 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 528 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி முருகன் தொடங்கி வைத்து பேசும்போது, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளான சொத்து சம்மந்தமான வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், மோட்டார் வாகன பாதிப்பு கோரும் நஷ்டஈடு கோரும் வழக்குகள், காசோலை வழக்குகள்,
தேசிய வங்கிகளின் வாரா கடன் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீர்வு காணப்படுகிறது. மக்கள் நீதிமன்றத்தில் முடிக்கப்படும் வழக்குகளில் முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்கும். இதனை வழக்காடிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், மகளிர் நீதிமன்ற நீதிபதி நாராயணன் ஆகியோர் நிலுவையில் இருந்த வழக்குகளை எடுத்து சமரச செய்து வைத்தனர்.
தீர்வு
கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரர்கள் கலந்துகொண்டனர். நீலகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 925 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 410 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ.2 கோடியே 34 லட்சத்து 15 ஆயிரத்து 506 ஆகும்.
வங்கி வாராக்கடன் சம்மந்தமாக 510 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 118 வழக்குளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன் மதிப்பு ரூ.1 கோடியே 59 லட்சத்து 82 ஆயிரத்து 083 ஆகும். மொத்தம் 1,435 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 528 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.