சேலம் மாவட்டத்தில் இருந்து மாநில கலைப்போட்டிக்கு 536 மாணவ, மாணவிகள் தகுதி
சேலம் மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான கலைப்போட்டியில் கலந்து கொள்ள 536 மாணவ, மாணவிகள் தகுதி பெற்று உள்ளனர்.
கலைப்போட்டிகள்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கலைத்திறன்களை வளர்க்கும் விதமாக பள்ளி அளவிலும், அதைத்தொடர்ந்து வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.
நடனம், இசைக்கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்புவித்தல், பட்டி மன்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலைப்போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட அளவில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 3 ஆயிரத்து 521 பேர் கலந்து கொண்டனர். அதே போன்று 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 4 ஆயிரத்து 271 பேர், 11, 12-ம் வகுப்பு படிக்கும் 3 ஆயிரத்து 682 பேர் என மொத்தம் மாவட்ட அளவில் 11 ஆயிரத்து 474 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாநில போட்டிக்கு தகுதி
சேலம் மாவட்ட அளவிலான போட்டிகளில் 536 பேர் முதல் இடத்தை பிடித்தனர். இதையடுத்து அந்த 536 பேரும், வருகிற 27-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை மதுரை, கோவை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவிலான கலைப்போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று உள்ளனர்.