பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 536 வாகனங்கள் பறிமுதல்


பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 536 வாகனங்கள் பறிமுதல்
x

பொங்கல் கொண்டாட்டத்தை ஒட்டி நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை விதிமீறலில் ஈடுபட்ட 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய தினம் தொடங்கி தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சென்னையில் இருக்கக்கூடிய பொழுதுபோக்கு இடங்கள், கடற்கரை பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது, பைக் ரேஸ், பைக் சாகசம் ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்று சென்னை காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை முழுவதும் 190 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. இந்த சோதனையின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் செல்லுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் அடிப்படையில் 536 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாகன தணிக்கை இன்றும் தொடரும் என்றும் பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட வேண்டாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story