542 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு


542 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 7:30 PM GMT (Updated: 16 Jun 2023 7:31 PM GMT)

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 542 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீண்டும் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 542 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீண்டும் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வட்டார அளவிலான குழு

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி செல்லாத குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பொள்ளாச்சி தெற்கு வட்டார வளமைய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் கிளோரி ஸ்டெல்லா, உதவி தொழிலாளர் ஆய்வாளர் அசாருதீன், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஆறுமுகம், பாக்கியலட்சுமி, கலைசெல்வி, வளர்மதி, ஹேமலதா, ஒன்றிய கவுன்சிலர் ருக்குமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

542 குழந்தைகள் கண்டுபிடிப்பு

பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள், 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 542 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.

பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். குழந்தை மூலம் அந்த குடும்பத்திற்கு வருமானம் வந்தால், தந்தைக்கு வருமானத்தை உருவாக்க உதவி செய்ய வேண்டும். அந்த குழந்தையின் படிப்பு செலவை ஏற்று, மாணவர் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story