தினமும் 5½ லட்சம் பெண்கள் இலவச பஸ் பயணம்
மதுரை மண்டலத்தில் தினமும் 5½ லட்சம் பெண்கள் இலவச பஸ் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கூறினார்.
மதுரை
மதுரை மண்டலத்தில் தினமும் 5½ லட்சம் பெண்கள் இலவச பஸ் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கூறினார்.
மருத்துவ முகாம்
மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக பைபாஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் சிறப்பு மருத்தவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரி, மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திடீர் நகர், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஹானா ஜோசப் மருத்துவமனை, வாய்ஸ் டிரஸ்ட், சுஜி ஹெல்த் கேர் சிஸ்டம் ஆகியவை இந்த முகாமைநடத்தியது.
முகாமை துவக்கி வைத்து மேலாண் இயக்குனர் ஆறுமுகம் பேசியதாவது:- முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை அமைச்சர் சட்டசபையில் போக்குவரத்து மானியக்கோரிக்கையில் அறிவித்துள்ளபடி சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் ரத்த வகை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. எக்கோ, கண் பரிசோதனை. காசநோய் பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகள் கழகத்தில் பணியாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு செய்யப்பட்டது.
கட்டணமில்லா பஸ்
மதுரை மண்டலத்தில் 890 பஸ்களில் 1.68 கோடி பெண்கள், கடந்த மாதத்தில் மட்டும் பயணம் செய்துள்ளனர். 5.50 லட்சம் பெண்கள், கட்டணமில்லா பஸ்சில் தினசரி பயணம் செய்கிறார்கள். ஆடி மாதத்தை முன்னிட்டு மதுரை சுற்றியுள்ள அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் உள்ள 40 கிளைகளில் பணியாற்றி வரும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள், நடத்துனர்களுக்கு மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கண் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரையின் முதுநிலை துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு) இளங்கோவன், பொது மேலாளர் சமுத்திரம், மதுரை மண்டல பொது மேலாளர் ராகவன், இணை இயக்குனர் (மக்கள் தொடர்பு) பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.