சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 55 பேர் காயம்


சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 55 பேர் காயம்
x

இலுப்பூர் அருகே தென்னலூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 55 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே தென்னலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டப்பட்டன.

இதில் 155 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். இதில் சில காளைகள், மாடுபிடி வீரர்களை பக்கத்தில் நெருங்கக்கூட விடவில்லை. சில காளைகள் தன்னை பிடிக்கவந்த மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடின. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

55 பேர் காயம்

காளைகள் முட்டியதில் லாக்குடி ராம்குமார் (வயது 40), தென்னலூர் அருணாசலம் (19), ராப்பூசல் முருகன் (45), துளுக்கம்பட்டி தீனா (22), கார்த்திக் (32), தமிழ்செல்வன் (25), சுப்ராம் (50), ராஜேஷ் (21), ஸ்ரீபன் (27) உள்ளிட்ட 55 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் விராலிமலை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டை தென்னலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் சரக்கு வேன், டிராக்டர், லாரி, மரங்களில் ஏறி நின்று கண்டு ரசித்தனர்.

ஜல்லிக்கட்டை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பாதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டால் பரபரப்பு

காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது 524 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சிலர் காளைகளை தொழுவிற்கு கொண்டு செல்லாமல் பல்வேறு இடங்களில் அவிழ்த்து விட்டனர். இதனால் காளைகள் அங்கும் இங்குமாக ஓடியது. இதனால் பொதுமக்கள் சிதறி ஓடினர் இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மேடையில் இருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் இறங்கி சென்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் விழா கமிட்டியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் வருவாய்த்துறை அதிகாரிகளை பலமுறை அழைத்து ஜல்லிக்கட்டை தொடர அனுமதி தாருங்கள் என கோரிக்கை வைத்தனர். ஒரு மணி நேரத்திக்கு பின்னர் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் வெளியேறுமாறு கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தொழுவில் அடைத்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக வெளியேறியது. இதனை யாரும் பிடிக்க வில்லை. சில காளைகள் மீண்டும் ஆங்காங்கே அவிழ்க்கப்பட்டது.




Next Story