ரூ.56 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்
பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பேரூராட்சிகளில் ரூ.56 கோடியில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மற்றும் ஒடுகத்தூர் பேரூராட்சியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.56 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை பள்ளிகொண்டா பேரூராட்சி 18-வது வார்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு தொகுதி ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். பேரூராட்சி மன்ற தலைவர் சுபபிரியா குமரன், துணைத் தலைவர் வசிம்அக்ரம், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு வரவேற்று பேசினார்.
இதுகுறித்து நந்தகுமார் எம்.எல்.ஏ. கூறுகையில் இந்த திட்டத்தை ஓராண்டுக்குள் செய்து முடித்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும். மேலும் படிப்படியாக சாலை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஒடுகத்தூர் பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சத்யவதி பாஸ்கரன், நகர செயலாளர் பெருமாள் ராஜா, வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.