கல்விக்கடன் வழங்கும் முகாமில் 560 பேர் விண்ணப்பம்


கல்விக்கடன் வழங்கும் முகாமில் 560 பேர் விண்ணப்பம்
x

புதுக்கோட்டையில் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான கல்விக்கடன் வழங்கும் முகாமில் 560 பேர் விண்ணப்பித்தனர். ஆணைகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

புதுக்கோட்டை

கல்விக்கடன் முகாம்

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில், சிறப்பு கல்விக்கடன் முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். அப்துல்லா எம்.பி. முன்னிலை வகித்தார். முகாமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

முகாமில் மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்காக வங்கிகளின் கல்வி கடனுக்காக விண்ணப்பித்தனர். முகாமில் தனியார் மற்றும் பொதுத்துறையை சேர்ந்த 22 வங்கிகள் கலந்து கொண்டன. இதில் கல்விக்கடன் கோரி 560 பேர் விண்ணப்பித்தனர். முகாமில் மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெறுவதற்கு தேவையான சான்றிதழ்களை பெற்றிட இ-சேவை மைய அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது.

வித்யாலட்சுமி வலைத்தளம்

முகாம் குறித்து அப்துல்லா எம்.பி. கூறுகையில், "கல்வி கடனுக்காக வங்கிகளை நேரடியாக அணுகும் போது சில நிர்வாக பிரச்சினைகளுக்காக கடன் மறுக்கப்படுகிறது. இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படும் போது கடன்கள் கிடைக்கிறது. கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பதற்காக வித்யாலட்சுமி போர்ட்டல் என்ற வலைத்தளம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் நிா்வகிக்கப்படுகிறது.

இந்த வலைத்தளத்தில் கல்விக்கடனுக்காக உரிய விண்ணப்பங்களை சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யும் போது எந்த வங்கியில் வாங்க வேண்டும் என்பதை அந்த இணையதளத்திலேயே தெரிவிக்கப்பட்டு விடும். அதன்பின் அந்த வங்கிக்கு சென்று மாணவர்கள் கடன் பெறலாம். அந்த வங்கிக்கடன் கொடுக்க மறுத்தால் தகுந்த காரணத்தை தெரிவிக்க வேண்டும். எனவே இந்த வலைத்தளத்தை மாணவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. தொடா்ந்து இந்த முகாம்கள் நடத்தப்படும்'' என்றார்.

ஆணைகள்

முகாமில் கல்விக்கடனுக்காக விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு உடனடியாக கடன் பெறுவதற்கான ஆணைகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, தமிழ்நாடு சிறப்புத்திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் வணங்காமுடி, ஸ்ரீ பாரதி கலைக் கல்லூரி இயக்குனர் குமுதா, கல்லூரி முதல்வர் கவிதா, ஸ்ரீ பாரதி மகளிர் கல்வி நிறுவன கவுரவ விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன், கல்வி நிறுவனத் தலைவர் தனசேகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story