ரூ.260 கோடியில் 567 கி.மீ. சாலைகள் சீரமைப்பு
கோவை மாநகராட்சியில் ரூ.260 கோடியில் 567 கி.மீ. சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
கோவை
கோவை மாநகராட்சியில் ரூ.260 கோடியில் 567 கி.மீ. சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
சாலைகள் சீரமைப்பு
பாதாள சாக்கடை பணிகள், கேபிள்கள் பதிப்பு, எரிவாயு குழாய் பதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளித்தன.
இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் (தூரிப்) கீழ் கோவை மாநகராட்சி சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி கோவை வடக்கு மண்டலத்தில் சீரமைக்கப்பட்ட காந்திஜி சாலையின் தரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமான சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் சேதம் அடைந்த சாலைகள் தூரிப் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.26 கோடியில் 38 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 2-ம் கட்டத்தில் ரூ.19 கோடியே 84 லட்சத்தில் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.
ரூ.260 கோடியில் சீரமைப்பு
கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை தூரிப், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், மாநில நிதிக்குழு சிறப்பு நிதி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாநகராட்சியில் ரூ.260 கோடியில் 567 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் 296 இடங்களில் சாலைகள் முழுவதும் சீரமைக்கப்பட்டு உள்ளது. 382 இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் நடக்கிறது. மீதம் உள்ள இடங்களில் பணிகள் 12-ந் தேதி தொடங்கி உள்ளது.
தற்போது ஒவ்வொரு வார்டிலும் எத்தனை கிலோ மீட்டர் தூரத் திற்குள் சாலைகள் உள்ளன. அதில் சீரமைக்கப்பட்ட சாலைகள், சீரமைக்கப்பட வேண்டிய சாலைகள் குறித்த வரைபடம் வார்டு வாரியாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
மருத்துவ முகாம்
துடியலூர், கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சிகுளம் உள்ளிட்ட குளக்கரைகளில் தன்னார்வ அமைப்பின ருடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழையை கருத்தில் கொண்டு மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாநகராட்சி சார்பில் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதுதவிர கணபதி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.