57 ஓட்டல்- கடைகளுக்கு அபராதம்
காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காத 57 ஓட்டல்கள், கடைகளுக்கு தொழிலாளர் துறையினர் அபராதம் விதித்தனர்.
காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் தேசிய விடுமுறை தினம் ஆகும். இதையொட்டி தனியார் நிறுவனங்கள், கடைகளில் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க வேண்டும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யும்படி தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதையடுத்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவசிந்து தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் கடைகள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 32 கடைகள், 34 ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 27 கடைகள், 30 ஓட்டல்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கடைகள், ஓட்டல்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
மேலும் தேசிய விடுமுறை தினத்தில் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்காமல் பணிபுரியும்படி நிர்ப்பந்தம் செய்தால் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958-ன் கீழ் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அதேபோல் காந்தி ஜெயந்தியையொட்டி பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து அரசு ஒப்பந்த பணிகள், இதர பணிகளில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களைபணியில் அமர்த்த கூடாது என்றும் கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.