8 மாவட்டங்களில் போலீசார் பறிமுதல் செய்த 577 கிலோ கஞ்சா அழிப்பு
எடப்பாடி:-
எடப்பாடி அருகே போலீஸ் ஐ.ஜி.பவானீஸ்வரி முன்னிலையில் 8 மாவட்டங்களில் போலீசார் பறிமுதல் செய்த 577 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. இதனை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பார்வையிட்டார்.
கஞ்சா அழிப்பு
கோவை மேற்கு மண்டல பகுதியில் போலீசாரின் பல்வேறு சோதனைகள் மூலம் சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டு சமூக விரோதிகளால் விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் 577 கிலோ எடையுள்ள போதை பொருட்களான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்து இருந்தனர்.
கோர்ட்டு உத்தரவின்பேரில் சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் போலீசார் பறிமுதல் செய்த 577 கிலோ கஞ்சா நேற்று எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலையில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிலையத்தில் அழிக்கப்பட்டது.
முதல்- அமைச்சர் பார்வையிட்டார்
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி முன்னிலையில் கஞ்சா அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், திருப்பூர் மாநகர துணை கமிஷனர் ஆசைதம்பி, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருப்தி அளிக்கிறது
இதற்கிடையே கோவை மேற்கு மண்டல கஞ்சா அழிப்பு கமிட்டி உறுப்பினரும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான சிவக்குமார் கூறுகையில், கோவை மேற்கு மண்டலத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 577 கிலோ நேற்று அழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை அரசுக்கும், கோர்ட்டுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில் குற்ற சம்பவங்கள் நடப்பது குறைந்துள்ளன. அப்படி இருந்தும் நடந்த குற்ற சம்பவங்களில் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த 222 நாட்களில் சேலம் மாவட்டத்தில் அமைதி திரும்புவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மக்களுடன் பணியாற்றியது திருப்தி அளிப்பதாக உள்ளது என்றார்.