5ஜி சிம்கார்டு மாற்றித்தருவதாக கூறி நூதன முறையில் பண மோசடி


5ஜி சிம்கார்டு மாற்றித்தருவதாக கூறி நூதன முறையில் பண மோசடி
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

5ஜி சிம்கார்டு மாற்றித்தருவதாக கூறி ஒரு கும்பல் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

5ஜி சிம்கார்டு மாற்றித்தருவதாக கூறி ஒரு கும்பல் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

5ஜி சேவை தொடக்கம்

தகவல் தொடர்பு துறையில் மாபெரும் புரட்சியாக 5ஜி சேவை கருதப்படுகிறது. உலக அளவில் இந்த 5ஜி சேவையில் சீனா தான் முன்னோடியாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி கடந்த 1-ந் தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக டெல்லி உள்பட முக்கிய நகரங்களில் இந்த 5ஜி சேவை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு உள்ளது.

தகவல் தொழில்நுட்பம் வளர்வது போல், அதனை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல்களும் அதிகரித்து உள்ளன. ஆரம்பத்தில் செல்போன்களுக்கு லிங்க் அனுப்பி அதன்மூலம் பண மோசடி செய்தனர். அதன்பின்னர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம்.கார்டுளின் எண்களை பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 4ஜி சிம்கார்டுகளை 5ஜி சிம்கார்டுகளாக மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

வங்கி கணக்கு

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

செல்போன்கள் மற்றும் இணையதளம் வழியாக பண மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் நாள்தோறும் ஒவ்வொரு வழியை கடைபிடிக்கின்றனர். தற்போது பொதுமக்களுக்கு செல்போன் நிறுவனத்தில் இருந்து போன் செய்வதாக கூறி 5ஜி சேவை தொடங்கப்பட்டு விட்டது. எனவே இந்த சேவையை பெற வேண்டும் என்றால் உங்களது பழைய 4ஜி சிம்கார்டை 5ஜி சிம்கார்டாக மாற்ற வேண்டும். அதற்கு உங்களது செல்போன் எண்ணிற்கு வரும் ஒ.டி.பி. எண்ணை கூறுங்கள் என்கின்றனர்.

இதனை நம்பும் பொதுமக்கள் சிலர் உடனயாக ஒ.டி.பி. எண்ணை தெரிவிக்கின்றனர். இதையடுத்து அந்த ஆசாமிகள் சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை ஆன்லைன் மூலமாக தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்கின்றனர். இதுபோன்ற பண மோசடி செய்யும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கோவையில் தற்போது வரை 5ஜி சேவை தொடங்கப்படவில்லை. மேலும் 4ஜி சிம்கார்டுகளை 5ஜி சிம்கார்டுகளாக மாற்ற வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திற்கு நேரில் சென்று மாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் செல்போனுக்கு வரும் ஒ.டி.பி. எண்ணை மற்றும் ரகசிய குறியீடுகளை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story