கோவில் திருவிழாவில் வாலிபரை தாக்கிய 6 பேர் கைது
கோவில் திருவிழாவில் வாலிபரை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
விராலிமலை தாலுகா, நீர்பழனியில் நேற்று முன்தினம் இரவு கோவில் திருவிழாவையொட்டி புராண நாடகம் நடைபெற்றது. அதை காண்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது இரவு 8 மணியளவில் காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் முருகேசன் (வயது 23) என்பவருக்கும் நீர்பழனி மாரி மகன் நாகராஜ் (24) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது நாகராஜுக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த குமார் மகன் பாலாஜி (23), பிச்சைக்கண்ணு மகன் வெங்கடேசன் (21), மூக்கன் மகன் ராஜா (26), சுப்பிரமணி மகன் சதீஷ்குமார் (20), ராசு மகன் மதன்குமார் (28) உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து முருகேசனை கட்டையாலும் கையாலும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் இதுகுறித்து மண்டையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து முருகேசனை தாக்கிய 6 பேரையும் நேற்று கைது செய்தார். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.