பார்களில் மதுவிற்ற 6 பேர் கைது


பார்களில் மதுவிற்ற 6 பேர் கைது
x

கோத்தகிரி அருகே பார்களில் மதுவிற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே பார்களில் மதுவிற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பார்களில் மது விற்பனை

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள், தனியார் மற்றும் டாஸ்மாக் பார்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அனுமதிக்கப்பட்ட பணி நேரத்திற்கு முன்னதாகவும், இரவு 10 மணிக்கு பிறகும் சில டாஸ்மாக் பார்கள் இயங்குவதாகவும், பார்களில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று காலை 9 மணிக்கு கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் பாரில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 3 பேர் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

6 பேர் கைது

தொடர்ந்து பார் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 30), கோவையை சேர்ந்த முகமது பாரூக் (வயது 45), மதுரையை சேர்ந்த சதீஷ் சிவா (23) என்பதும், பாரில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 102 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.12,720-யை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கோத்தகிரி எஸ்.கைகாட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரிலும் சோதனை நடத்தினர். அங்கும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பார் ஊழியர்களான மதுரையை சேர்ந்த ராஜு (32), அறந்தாங்கியைச் சேர்ந்த அன்பரசன் (26), எஸ்.கைகாட்டியைச் சேர்ந்த கமலநாதன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28 மது பாட்டில்கள் மற்றும் ரூ.17,710-யை போலீசார் பறிமுதல் செய்தனர்.

130 மதுபாட்டில்கள் பறிமுதல்

நேற்று ஒரே நாளில் கோத்தகிரி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுவிற்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 6 பேரையும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை தனிப்படை போலீசார் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story