கார்களில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 6 பேர் கைது
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கார்களில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது
பொள்ளாச்சி
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கார்களில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புகையிலை பொருட்கள்
தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்களை கேரளாவில் இருந்து கடத்தி வந்து பொள்ளாச்சியில் விற்பனை செய்வதாக பொள்ளாச்சி நகர மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளவேந்தன் மற்றும் போலீசார் பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள திருமண மண்டபம் அருகே வந்த 2 கார்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி அதற்குள் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள்.
6 பேர் கைது
உடனே போலீசார் காரை சோதனை செய்த போது, தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதில் காரில் வந்தது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பிரமோத் (வயது 38), மனோஜ் மேத்யூ (45), கோவை கரும்புக்கடையை சேர்ந்த காஜா மொய்தீன் (44), குமரேசன் (47), பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியை சேர்ந்த மதியழகன் (54), கப்பளாங்கரையை சேர்ந்த மணிகண் டன் (48) ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது.
பிரமோத், மனோஜ் மேத்யூ ஆகியோர் கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி கேரளாவில் பதுக்கி வைத்து பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்து வந்து உள்ளனர்.
இதற்கு காஜா மொய்தீன், குமரேசன் ஆகியோர் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 2 கார்கள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள 375 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.