பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலையில் 6 பேர் கைது - தந்தை கொலைக்கு பழிக்குப்பழி வாங்கியதாக வாக்குமூலம்


பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலையில் 6 பேர் கைது - தந்தை கொலைக்கு பழிக்குப்பழி வாங்கியதாக வாக்குமூலம்
x

பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தந்தை கொலைக்கு பழிக்குப்பழி வாங்கியதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் குமார் என்ற கருப்பு குமார் (வயது 46). ரவுடியான இவர், நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை ஆரணி கெங்கன் தெருவில் சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுபற்றி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் இருதயம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொைல வழக்கு தொடர்பாக வண்ணாரப்பேட்டை வள்ளுவன் தெருவை சேர்ந்த ரவுடி வெங்கடாவின் மகன் ஆகாஷ் (23), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி குட்டியப்பன் மகன் பூபதி (29), புளியந்தோப்பைச் சேர்ந்த பார்த்திபன் (24), முரளி (26), லாரன்ஸ் (27), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாபு (24) ஆகிய 6 ேபரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஆகாஷ், "2013-ம் ஆண்டு எனது தந்தை வெங்கடாவை திட்டமிட்டு கருப்பு குமார் கொலை செய்தார். அதற்கு பழிக்குப்பழியாக குமாரை ெகாலை செய்ய திட்டமிட்ட நான், 10 வருடம் காத்திருந்து நண்பர்களுடன் சேர்ந்து கடந்த சில நாட்களாக குமாரை நோட்டமிட்டு வெட்டிக்கொலை செய்தேன்" என வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கொலையான குமாரின் உறவினர்களான பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி கங்கன் தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (35), திருவொற்றியூரை சேர்ந்த ராஜசேகர் (42) ஆகியோர் குமார் வீட்டில் துக்கம் விசாரிக்க சென்றனர். பின்னர் இருவரும் சேர்ந்து அருகில் உள்ள பழைய கட்டிடத்துக்குள் சென்று மது அருந்தினர்.

போதை தலைக்கேறியதும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன், ராஜசேகர் தலையில் கல்லை தூக்கி போட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த ராஜசேகர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் கமலக்கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

நேற்று காலை ராஜசேகர் படுகாயங்களுடன் கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடந்தனர். அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கமலக்கண்ணனை நேற்று கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story