ரூ.6½ கோடி மதிப்பில் சூரியகுளம் சீரமைக்கும் பணி தாமதம்
ஆரணியில் ரூ.6½ கோடி மதிப்பில் சூரியகுளம் சீரமைக்கும் பணி தாமதம் குறித்து சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஆய்வு ெசய்தார்.
ஆரணி
ஆரணி நகரின் மையத்தில் சூரிய குளம் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையிலும், குளத்திற்கு கால்வாய் தண்ணீர் கலக்காதவாறு திருமலை சமுத்திரம் ஏரிக்கரையில் இருந்து உபரிநீர், மழைநீர் வரக்கூடிய கால்வாயை சீரமைத்து குளத்திற்கு நல்ல தண்ணீர் கிடைக்கும் வகையிலும் குளத்தைச் சுற்றிலும் மின்விளக்குகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அப்போதைய அமைச்சராக இருந்தபோது ரூ.6½ கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டு அதற்காக ரூ.1 கோடியே 60 லட்சம் நிதியும் நகராட்சிக்கு வரப்பெற்றது. அந்த பணி கடந்த 3½ ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பணி நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த சுற்றுச்சூழல் துறை இயக்குனர் தீபக் பில்ஜி இன்று பணியினை நேரில் பார்வையிட்டு தாமதத்திற்கான காரணங்களை அதிகாரியிடம் கேட்டடறிந்தார்.
அப்போது உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி, தாசில்தார் ரா.மஞ்சுளா, நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.