மின்கசிவால் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்


மின்கசிவால் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்
x
தினத்தந்தி 13 Aug 2023 12:15 AM IST (Updated: 13 Aug 2023 5:31 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே மின்கசிவால் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின. அப்போது கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

தீப்பிடித்தது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சின்னகவுண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான கூரைவீடுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் பொன்னுசாமி என்பவர் குடும்பத்துடன் வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அனைவரும் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். மேலும் பொன்னுசாமி வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரும் வெடித்தது. இதில் அருகே இருந்த கூரை வீடுகளும் தீப்பிடித்து எரியத்தொடங்கின. இதனால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் இதுகுறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

6 வீடுகள் சேதம்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதில் 4 கூரை வீடுகள், 2 தொகுப்பு வீடுகள் என 6 வீடுகள் எரிந்து சேதமாகின.

இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ், 2 சைக்கிள்கள், ஸ்கூட்டர், கட்டில், மெத்தை, துணிமணிகள் என அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகின. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்கசிவு காரணமாக 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story