ஆதனக்கோட்டை-பெரம்பூருக்கு செல்லும் 6 கி.மீ. சாலையை சீரமைக்க வேண்டும்
ஆதனக்கோட்டை-பெரம்பூருக்கு செல்லும் 6 கி.மீ. குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வீரமாகாளியம்மன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம், பெரம்பூரில் வீரம்மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆதனக்கோட்டையிலிருந்து, கருப்புடையான்பட்டி வழியாக பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் 6 கிலோ மீட்டர் தார்சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
கோரிக்கை
இந்த சாலை புதுக்கோட்டை, குன்றாண்டார்கோவில் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதியில் செல்லும் ஒன்றிய சாலையாக உள்ளது. தினமும் அதிகமான வாகனங்கள் செல்லும் பிரதான சாலை என்பதால் ஒன்றிய சாலையினை நெடுஞ்சாலைத்துறை சாலையாக தரம் உயர்த்தி பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவில் செல்லும் பக்தர்களின் நலன் கருதி நவீன எந்திரங்களை கொண்டு தரமான தார்சாலையாக போட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தார்சாலையாக அமைக்க வேண்டும்
ஆதனக்கோட்டையை சேர்ந்த ராஜகோபால் கூறுகையில், வீர மாகாளியம்மன் கோவில் செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் மோட்டார் சைக்கிளில் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து புதிய தார்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று கூறினார்.
60 கிலோ மீட்டர் சுற்றி...
கருப்புடையான்பட்டியை சேர்ந்த பத்மா கூறுகையில், பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு கந்தர்வகோட்டை, ஊரணிபுரம், பட்டுக்கோட்டை, கறம்பக்குடி, மழையூர் ஆகிய ஊர்களை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஆதனக்கோட்டை வழியாக வந்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த சாலையில் பல்வேறு இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தோடு கோவிலுக்கு சென்று வருகின்றன. எனவே குண்டும், குழியுமாக உள்ள 6 கிலோ மீட்டர் சாலையால் புதுக்கோட்டை சென்று அண்டக்குளம் வழியாகவும் 60 கிலோ மீட்டர் சுற்றி பெரம்பூர் சென்று வருகின்றனர். இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கூறினார்.