கின்னஸ் சாதனைக்காக 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள்


கின்னஸ் சாதனைக்காக 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள்
x

ஒட்டன்சத்திரம் அருகே கின்னஸ் சாதனைக்காக, 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடப்படுகிறது.

திண்டுக்கல்

கின்னஸ் சாதனை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் பழமை வாய்ந்த திருவேங்கடநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலுக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலம் அப்பகுதியில் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நிலத்தில் செடி, கொடிகள், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. அதனை சீரமைத்து அங்கு மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும் அங்கு 6 மணி நேரத்தில், 6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அதன்படி அந்த நிலத்தில் உள்ள செடி, கொடி மற்றும் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. பின்னர் மரக்கன்றுகள் நடுவதற்காக, 6 லட்சம் குழிகள் தோண்டப்பட்டன. தற்போது அந்த குழிகளின் அருகே, மரக்கன்றுகளை கொண்டு வைக்கும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது.

திட்டமிட்டப்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கின்னஸ் சாதனை முயற்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் கின்னஸ் நடுவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை பார்வையிட்டு சான்றிதழ் வழங்குகிறார்கள்.

ஆழ்துளை கிணறுகள்

மேலும் மரக்கன்று நட்டதற்கு பிறகு, அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பதற்காக 6 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஏற்கனவே அங்குள்ள 2 கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடவு செய்த மரக்கன்றுகளை பார்வையிட வருவோர் மற்றும் குழந்தைகள் அமர்ந்து ஓய்வு எடுக்க சிமெண்டு இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. சிறுவர்கள் விளையாடவும், பொழுதை போக்குவதற்காகவும் அங்கு விளையாட்டு உபகரணங்கள், பொம்மைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.


Next Story