யானை குளிக்க ரூ.6 லட்சத்தில் தொட்டி
யானை குளிக்க ரூ.6 லட்சத்தில் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தற்போது இருந்து வரும் யானை ராமலட்சுமி, ராம்கோ ராமசுப்பிரமணிய ராஜாவால் உபயமாக வாங்கி கொடுக்கப்பட்டது. பீகாரில் இருந்து 5 வயது குட்டி யானையாக கடந்த 2007-ம் ஆண்டு வாங்கி ராமேசுவரம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. யானை ராமலட்சுமி கோவிலுக்கு வந்து 16 ஆண்டுகள் முடிந்துள்ளதுடன் தற்போது இதன் வயது 21 வயதை எட்டி உள்ளது. 3 டன் எடை உள்ள இந்த யானைக்கு தினமும் கோத்ரி புல், கேப்பை, அரிசி சாதம், அஷ்ட சூரணம், பெருங்காயம், நல்லெண்ணெய், தென்னை மட்டை, ஆல இலை, அரச இலை உள்ளிட்டவைகளும் உணவாக வழங்கப்பட்டு வருகின்றன.
யானை ராமலட்சுமியை 2 பாகன்கள் பராமரித்து வருகின்றனர். யானை ராமலட்சுமியை தினமும் சவர் மூலமும், டியூப் மூலமும் தண்ணீர் அடித்து பாகன்கள் குளிப்பாட்டி வருகின்றனர். இந்த நிலையில் யானை குளிப்பதற்கு வசதியாக வடக்கு நந்தவன பகுதியில் நன்கொடையாளர் ஒருவர் மூலம் ரூ.6.50 லட்சத்தில் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளன. இது 30 அடி நீளம், 30 அடி அகலத்தில் உள்ளது. தொட்டியில் யானை இறங்கி சென்று வர வசதியாக சறுக்கு போன்ற பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, கோவில் யானை குளிப்பதற்கு வசதியாக புதிய குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே யானை அங்கு குளிக்க அனுப்பப்படும். இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வடக்கு நந்தவன பகுதியில் நட்டு வைக்கப்பட்டுள்ள கோத்ரி புல், தென்னை மரம் உள்ளிட்ட அனைத்து வகை செடி, மரக்கன்றுகளுக்கும் செல்லும் வகையில் பைப்லைனும் அமைக்கப்பட்டுள்ளன என்றனர்.