விவசாய நிலத்தை அபகரித்ததாக கூறி பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி-ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


விவசாய நிலத்தை அபகரித்ததாக கூறி பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி-ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Aug 2023 7:00 AM IST (Updated: 15 Aug 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலத்தை ஒருசிலர் அபகரித்ததாகவும், அதனை மீட்டுத்தரக் கோரியும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி

விவசாய நிலத்தை ஒருசிலர் அபகரித்ததாகவும், அதனை மீட்டுத்தரக் கோரியும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கோத்தர் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை முயற்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இங்கு ஊட்டி அருகே கோக்கால் கிராமம் பழங்குடியினத்தை சேர்ந்த (கோத்தர்) மோகன் குமார் (வயது 47) என்பவர் தனது மனைவி மற்றும் 13 வயது மகள் உள்பட 6 பேருடன் வந்தார். அப்போது அவர்கள் அனைவரும் திடீரென தங்களின் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவர்கள் 6 பேரையும் தடுத்து நிறுத்தி தீப்பெட்டியை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தற்கொலைக்கு முயன்ற மோகன் குமார் கூறியதாவது:- கோக்கால் பகுதியில் எங்கள் தாய் வழி சமூகம் மூலம் எனக்கு பாத்தியப்பட்ட பாரம்பரிய நிலத்தில் 6 ஏக்கரை ஒருசிலர் ஆக்கிரமித்துள்ளனர். சுமார் 35 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு தொடர்கிறது. நிலத்தின் சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் எங்களது பெயரில் உள்ளது.

பொய் வழக்கு

இதுகுறித்து போலீஸ் நிலையம், ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்து வருகிறேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் எங்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் சுமார் 40 சென்ட் நிலத்தில் கேரட் பயிரிட்டோம். ஆனால் ஒருசிலர் கேரட்டை அழித்துவிட்டு அவர்கள் தற்போது அவரை பயிரிட்டு உள்ளனர். நாங்களோ எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களோ பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை. மேலும் பழங்குடியின நிலத்தை பழங்குடியின சமுதாயம் அல்லாத ஒருவர் வாங்கியுள்ளார். எனவே போலியாக நடந்த பத்திரப்பதிவை ரத்து செய்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மேலும் ஊட்டி மேற்கு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story