பள்ளம் தோண்டி 6 மாசமாச்சு...நடைபாதை அமைக்கும் பணி என்னாச்சு...


பள்ளம் தோண்டி 6 மாசமாச்சு...நடைபாதை அமைக்கும் பணி என்னாச்சு...
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவை பெரியகடை வீதியில் நடைபாதையை சீரமைக்க பள்ளம் தோண்டி 6 மாதமாகியும், இன்னும் நடைபாதை அமைக்கும் பணி முடிக்கப்படாமல் உள்ளது.

கோயம்புத்தூர்

டவுன்ஹால்

கோவை பெரியகடை வீதியில் நடைபாதையை சீரமைக்க பள்ளம் தோண்டி 6 மாதமாகியும், இன்னும் நடைபாதை அமைக்கும் பணி முடிக்கப்படாமல் உள்ளது.

ரூ.7½ கோடியில் நடைபாதை சீரமைப்பு

கோவை மாநகரில் கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் காணப்படும். குறிப்பாக பண்டிகை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இந்த பகுதிகளில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட இடங்களில் பிரான்சு நாட்டு நிறுவனத்தின் உதவியுடன் பிரத்யேக நடைபாதை அமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.7½ கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் கட்டமாக ஒப்பணக்கார வீதி தொடங்கி குட்ஷெட் சாலை வரை பிரத்யேக நடைபாதை அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

விபத்து அபாயம்

இதற்காக பெரியகடை வீதியில் போடப்பட்டிருந்த பழைய நடைபாதை இடித்து அகற்றப்பட்டு, புதிய நடைபாதை அமைப்பதற்காக 4 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு, அதில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

நடைபாதை அமைக்கும் பணிக்காக பெரியகடை வீதியின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. குறிப்பாக டவுன்ஹால் பஸ் நிலையம் அருகே நடைபாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்கள் ஆன நிலையில் மூடப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் அந்த பள்ளத்தின் அருகே அச்சத்துடன் நின்று கொண்டு பஸ் ஏறும் நிலை உள்ளது. ஒரு சில அடிகள் கால்களை பின்னோக்கி எடுத்து வைத்தால் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

மேலும் புதிதாக அமைக்கப்படும் நடைபாதை அருகே குழாய்கள் பதிக்கும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள டவுன்ஹால் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் வாகனங்களுக்கு வழிவிடமுடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.மேலும் சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோவையில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதியாக டவுன்ஹால் பகுதியில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்னுரிமை அளித்து, பணிகளை முடிக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story