சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை


சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை
x

நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இரவோடு இரவாக கடலூர் ஜெயிலுக்கு அவரை போலீசார் கொண்டுசென்றனர்.

மதுரை

நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இரவோடு இரவாக கடலூர் ஜெயிலுக்கு அவரை போலீசார் கொண்டுசென்றனர்

அவதூறு வழக்கு பதிவு

சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தது.

இந்த நடவடிக்கைக்கு பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கிரிமினல் அவமதிப்பு வழக்கும் மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது.

இந்த 2 வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நீதித்துறை குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்தது சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. இதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.

விசாரணைக்கு ஆட்சேபம்

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று காலை 10.30 மணி அளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் முன்பு சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி, பதில் மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர், தன் மீதான நடவடிக்கைகள் வரம்பு மீறிய செயல். இந்த அவமதிப்பு வழக்கு குறித்து மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. நீதித்துறையின் உயர்ந்த பதவிகளில் பிற்படுத்தப்பட்டவர்களை விட, பிராமணர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தற்போதைய சட்ட மந்திரி, நீதிபதி குரியன் ஜோசப் ஆகியோரும் நீதித்துறையில் உள்ள ஊழல்கள் குறித்து பேசியுள்ளனர். பொது விஷயங்கள் குறித்து பேசுவதற்கு எனக்கு உரிமை உண்டு. என்னை தடுக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

பின்னர் ஐகோர்ட்டு பதிவாளர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சோமையாஜி, கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கைகளின் போதும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 215-ஐ செயல்படுத்தும் போதும் அட்வகேட் ஜெனரல் ஒப்புதல் தேவையில்லை, என்றார்.

பொறுப்பற்றவர்

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர். சவுக்கு சங்கர் கோர்ட்டு வளாகத்தில் இருந்தார்.

பின்னர் நேற்று மாலை 5.45 மணி அளவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சவுக்கு சங்கர், அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு புதியவர் அல்ல. கடந்த 2016-ம் ஆண்டிலேயே அவர் மீது அவமதிப்பு வழக்கு தாக்கலாகி, நிலுவையில் உள்ளது. ஆனாலும் அவர், மோசமானவராகவும், பொறுப்பற்றவராகவும் தொடர்ந்து வருகிறார்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 19 (1) (ஏ) உறுதி செய்கிறது. ஆனால் இந்த உரிமை முழுமையானது கிடையாது. அரசு மற்றும் நீதித்துறைகளுக்கு விதிவிலக்கு உள்ளது. நீதிபதிகள் மற்றும் நீதித்துறை குறித்து சவுக்கு சங்கர் தொடர்ந்து பல்வேறு அவதூறு கருத்துகளுடன் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மன்னிப்பு கேட்கவில்லை

அவர் தனது செயலுக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை. அவரது பேட்டிகளை நியாயப்படுத்துகிறார்.

நீதித்துறையையும், நீதிபதிகளின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் குறைக்கும் வகையில் அவரது அறிக்கைகள், கட்டுரைகள், பேட்டிகள் அமைந்துள்ளன. அவர் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது உறுதியாகிறது.

தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு இருந்தால் இந்த வழக்கை முடித்து வைத்திருப்போம். ஆனால் அதற்கு முன்வரவில்லை. சவுக்கு சங்கர், அரசு ஊழியராக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். 13 ஆண்டுகளாக அரசிடம் உதவித்தொகை பெற்றுள்ளார். ஆனாலும் அரசின் துறைகளை விமர்சிக்கிறார். நீதித்துறை மீதான தனது தாக்குதலை தொடர்வது என தீர்மானித்துள்ளார்.

6 மாதம் சிறை தண்டனை

எனவே அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கிறோம். அவரை போலீசார் உடனடியாக மதுரை மத்திய சிறையில் அடைக்க வேண்டும். அவரது அவதூறான அறிக்கைகள், பேட்டிகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குவதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து ஐகோர்ட்டில் இருந்து நேற்று இரவு 7.40 மணியளவில் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரை இரவோடு இரவாக கடலூர் சிறைக்கு மாற்றுவதாக போலீசார் அழைத்துச்சென்றனர்.


Related Tags :
Next Story