6 மாதத்திற்கு தேவையான தானியங்கள் கையிருப்பில் உள்ளன
இந்திய உணவு கழக கிடங்கில் 6 மாதத்திற்கு தேவையான அரிசி, கோதுமை இருப்பு உள்ளது என ஆய்வு செய்த மண்டல மேலாளர் ரத்தன் சிங் மீனா தெரிவித்தார்.
காட்பாடி
இந்திய உணவு கழக கிடங்கில் 6 மாதத்திற்கு தேவையான அரிசி, கோதுமை இருப்பு உள்ளது என ஆய்வு செய்த மண்டல மேலாளர் ரத்தன் சிங் மீனா தெரிவித்தார்.
சேமிப்புக் கிடங்கு
காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் மற்றும் சேமிப்பு கிடங்கு உள்ளது.
இந்த கிடங்கில் இருந்து செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் விடுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த கிடங்கில் நேற்று மண்டல மேலாளர் ரத்தன் சிங் மீனா திடீர் ஆய்வு செய்தார்.
தேவையான அளவு
பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு 6 வருவாய் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் அரிசி, கோதுமை ஆகிய உணவு தானியங்கள் 6 மாதத்திற்கு தேவையானவை கையிருப்பில் உள்ளது. எந்தவிதமான பற்றாக்குறையும் இல்லை.
கடந்த ஒரு ஆண்டாக செறிவூட்டப்பட்ட அரிசி மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. அவை இங்கே முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
வரும் பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில் பொதுமக்களுக்கு சலுகையாக உணவு தானியங்கள் வழங்க அரசு முடிவு செய்து கூறினால் அவற்றை வழங்குவதற்கு தேவையானவையும் கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.