எரி சாராயம் பதுக்கிய வழக்கில் மேலும் 6 பேர் கைது

திருவண்ணாமலை அருகே எரி சாராயம் பதுக்கிய வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தில் திருவண்ணாமலை கலால் போலீசார் கடந்த 25-ந் தேதி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 120 கேன்களில் இருந்த 4 ஆயிரத்து 200 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் எரிசாராயத்தை பதுக்கி வைத்திருந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மாந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வடமாநிலத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு எரிசாராயம் கடத்தி வந்து வள்ளிவாகை கிராமத்திலும், ஆரணி அருகே களம்பூரிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கலால் போலீசார் களம்பூருக்கு நேற்று சென்று, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 கேன்களில் இருந்த 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் சாராயக்கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம் புளியரம்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமார், களம்பூரை சேர்ந்த முனியப்பன், செய்யாறை சேர்ந்த சந்துரு, மாரி, திருவண்ணாமலையை சேர்ந்த திருமலை மற்றும் மோகன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சாராயம் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் ஒரு மினிலாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.