அருமனை அருகேபெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு


அருமனை அருகேபெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம்  6½ பவுன் நகை பறிப்பு
x

அருமனை அருகே பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

அருமனை:

அருமனை அருகே பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

6½ பவுன் சங்கிலி பறிப்பு

அருமனை அருகே செம்மங்காலை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் கணேசன். நேற்று முன்தினம் இரவு பெட்டிக்கடையில் கணேசன் மனைவி கிருஷ்ணம்மாள் உடகார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பெண் உள்பட 2 பேர் வந்தனர்.

மோட்டார் சைக்கிளில் ஆண் உட்கார்ந்து இருக்க ஹெல்மெட் அணிந்த பெண் கீழே இறங்கி பெட்டிக்கடைக்கு வந்தார். அவர் பழம் வாங்குவது போல் நடித்து கிருஷ்ணம்மாள் கழுத்தில் கிடந்த 6½ பவுன் சங்கிலியை பறித்தார். உடனே அவர் மோட்டார் சைக்கிளில் ஏறிசென்றார்.

பெண் செருப்பு

உடனே கிருஷ்ணம்மாள் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். அதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது தங்க நகையை பறித்து சென்ற தகவலை கிருஷ்ணம்மாள் கூறினார். அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடிக்க சென்ற போது அவர்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்து விட்டனர்.

இதுபற்றி அருமனை போலீசில் புகார் செய்யப்பட் டது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பெண் மோட்டார் சைக்கிளில் ஏறி செல்லும் போது தனது ஒரு செருப்பை தவற விட்டு சென்றுள்ளார். அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

போலீஸ் விசாரணை

அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி, பெண் உள்பட 2 பேரை தேடி வருகிறார்கள்.

குமரி-கேரள எல்லைப் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. தமிழக பகுதியில் இருந்து நகைகளை பறித்துக் கொண்டு கேரளாவில் தஞ்சம் புகுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அப்போது போலீசார் தடைகளை அமைத்தும், அடிக்கடி ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சமீபகாலமாக நகைப் பறிப்பு சம்பவங்கள் இந்தப் பகுதியில் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது.

தற்போது பல மாதங்களாக இந்த பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார் மாற்றுப் பணிகளுக்கு செல்வதாலும், போலீசாரின் கண்காணிப்பு குறைவாக இருந்ததால், மீண்டும் இந்த பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இது இந்த பகுதியில் உள்ள மக்களை மீண்டும் அச்சமும,் பீதியும் அடையச் செய்துள்ளது.

எனவே குமரி-கேரள எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story