நகை வியாபாரியிடம் ரூ.1¼ கோடியை பறித்த 6 பேர் கைது
நகை வியாபாரியிடம் ரூ.1¼ கோடியை பறித்த 6 பேர் கைது
கோவை, ஜூன்
பொள்ளாச்சி அருகே நகை வியாபாரியிடம் ரூ.1¼ கோடியை பறித்து சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகை வியாபாரி
கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 44). நகை வியாபாரி. இவரிடம் தனியார் வங்கி மேலாளர் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த ரியல் எஸ்டேட் செய்து வரும் குட்டி என்கிற சின்ன குட்டி (43) அறிமுகம் ஆனார்.
அப்போது சின்ன குட்டி, தனக்கு தெரிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பாண்டியனிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.1 கோடிக்கு உள்ளது.
இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு ரூ.85 லட்சத்திற்கு 500 ரூபாய் நோட்டுகள் தந்தால் போதும் என்று தெரிவித்தார். மேலும் கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் 15 சதவீத கமிஷன் அடிப்படையில் மாற்றி தருவதாகவும் தெரிவித்து உள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் 500 ரூபாய் நோட்டுகள் தருவதாக தெரிவித்தார்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டு வீடியோ
இதனையடுத்து நகை வியாபாரி பிரகாஷ் இதுதொடர்பாக சின்ன குட்டி, பாண்டியன் ஆகியோரை காரமடையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது சின்ன குட்டி 2 ரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாய் இருக்கும் வீடியோவை காண்பித்து உள்ளார். இந்த வீடியோவை பார்த்ததும் அவர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாக நகை வியாபாரி பிரகாஷ் நம்பினார்.
இதனை தொடர்ந்து பொள்ளாச்சியில் வைத்து பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி நகை வியாபாரி பிரகாஷ் ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் பணத்துடன் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதிக்கு சென்றார். அங்கு சின்ன குட்டி, பாண்டியன் மற்றும் பெண் உள்பட 6 பேர் இருந்தனர். பிரகாஷ் பணம் எண்ணும் எந்திரத்தையும் எடுத்து சென்றிருந்தார்.
பணம் பறிப்பு
இந்த நிலையில் 6 பேர் கொண்ட அந்த கும்பல் நகை வியாபாரி பிரகாஷ் கவனத்தை திசை திருப்பி பணம் இருந்த காருடன் தப்பி செல்ல முயன்றனர். இதனை கண்ட பிரகாஷ் கூச்சல் போடவே அந்த கும்பல் அவரை தாக்கி மிரட்டி விட்டு அவர் வைத்திருந்த ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம், பணம் எண்ணும் எந்திரம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நகை வியாபாரி பிரகாஷ், ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கைது
இந்த தனிப்படையினர் மதுரை உசிலம்பட்டி அருகே வைத்து ரூ.1¼ கோடி கொள்ளையடித்த பெண் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் பணம் எண்ணும் எந்திரம், 2 கார்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நிலாகோட்டையை சேர்ந்த மீனாட்சி (38), தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பாண்டியன் (52), அழகர்சாமி (45), சவுமியான் (29), கவாஸ்கர் (26) மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்கிற சின்னக்குட்டி என்பது தெரியவந்தது.