ஜாமீனில் வந்தவரை தாக்க முயன்ற 6 பேர் கைது
ஜாமீனில் வந்தவரை தாக்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை கருப்பணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன்கள் கார்மேகம் என்ற மதன்லால் (30), சங்கர்லால் (28). கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி இவா்களுக்கும் பரவையைச் சார்ந்த பாஸ்கரன் மகன் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசன் இறந்தார். இது சம்பந்தமாக மதன்லால் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜாமீனில் வெளிவந்த மதன்லால் சமயநல்லூர் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்து போட்டு வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் மதன்லாலும், தம்பி சங்கர்லாலும் போலீஸ் நிலையம் வந்து கையெழுத்து போட்டுவிட்டு சமயநல்லூர் அணுகு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அரிவாளுடன் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அந்த கும்பல் இருவரையும் தாக்கியது. இதில் மதன்லாலுக்கும் சங்கர் லாலுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய 9 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பரவை கொண்ட மாரிபாலம் அருகில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் பரவையைச் சேர்ந்த சக்திவேல் (23), ரஞ்சித்குமார் (19), மருத நாயகம் (20), சந்தோஷ் (25), முத்துநாயகம் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மதன்லாலை தாக்க வந்த கும்பல் என்று தெரியவந்தது. அந்த 6 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.