தனுஷ்கோடிக்கு குழந்தைகள் உள்பட 6 பேர் அகதிகளாக வருகை
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குழந்தைகள் உள்பட 6 பேர் அகதிகளாக வருகை
ராமேசுவரம்
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு குழந்தைகள் உள்பட 6 பேர் அகதிகளாக நேற்று வந்தனர்.
படகில் வந்த 6 பேர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ முடியாமல் இதுவரையிலும் தமிழகத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு ஒன்றின் மூலம் நேற்று முன்தினம் இரவு 6 பேர் அகதிகளாக புறப்பட்டு நேற்று அதிகாலை தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் வந்து இறங்கினர்.
இது பற்றி அறிந்ததும் ராமேசுவரம் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று கடற்கரையில் அமர்ந்திருந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரையும் வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
உருக்கமான தகவல்கள்
இலங்கை கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (வயது 49), இவருடைய மனைவி ரோஜா(38), மகள் விதுஷா(12), மகன்கள் தனுஷ்யன்(10), கிரிஸ்யன் (7) என்பது தெரியவந்தது. இவர்களுடன் நியூட்டன் நிமல் (47) என்பவரும் வந்துள்ளார்.
இதுதொடர்பாக உதயகுமார், போலீசாரிடம் கூறியதாவது:-
இலங்கையில் கடை வைத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தேன். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு அரிசி, சீனி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதிக வசதி படைத்தவர்கள் மட்டும்தான் தற்போது இலங்கையில் வாழ முடியும் என்ற நிலை உள்ளது. சரிவர வேலையும் இல்லாததால் இலங்கையில் நாங்கள் பசி, பட்டினியில் தவித்தோம்.
எனவே மனைவி, 3 குழந்தைகளுடன் தமிழகம் வர திட்டமிட்டு கிளிநொச்சியில் இருந்து மன்னார் வந்து அங்குள்ள ஏஜெண்டு ஒருவரிடம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்தோம். இரண்டு படகோட்டிகள் எங்களை படகில் ஏற்றி அழைத்து வந்தனர். ஆனால் இலங்கை பணம் ரூ.2 லட்சம் கேட்டனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததால் மீதமுள்ள பணத்துக்கு என் மகள் காதில் அணிந்திருந்த தங்க கம்மல்களை கழற்றி படகோட்டியிடம் கொடுத்து தனுஷ்கோடி வந்து இறங்கினோம்.
இவ்வாறு அவர் உருக்கமுடன் கூறினார். அகதிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.