தனியார் காப்பக நிர்வாகி உள்பட 6 பேர் கைது
கோவையில் ஆதரவற்றவர்களை பிடித்து மொட்டை அடித்த விவகாரத்தில் தனியார் காப்பக நிர்வாகி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரூர்
கோவையில் ஆதரவற்றவர்களை பிடித்து மொட்டை அடித்த விவகாரத்தில் தனியார் காப்பக நிர்வாகி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆதரவற்றோர்களுக்கு மொட்டை அடிப்பு
கோவை தொண்டாமுத்தூரை அடுத்த அட்டுக்கல் மலையடிவாரத்தில் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து, வாகனங்களில் கொண்டு வந்து இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் காப்பகத்தில் இருந்து காப்பற்றுங்க, காப்பாற்றுங்க என்று இரவு முழுவதும் கூச்சல் மற்றும் அழுகை சத்தம் கேட்பதாகவும் அருகில் உள்ள பழங்குடி மக்கள் மூலம் தகவல் பரவியது.இதைத்தொடர்ந்து, அந்த இடத்திற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் திரண்டு வந்தனர். அப்போது காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அதில் பெரும்பாலானோருக்கு மொட்டை அடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, உடனடியாக தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பொதுமக்கள் போராட்டம்
விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அன்பின் ஜோதி ஆசிரமத்தைச் சேர்ந்த ஜூபின்பேபி (வயது 44) மற்றும் சிலர் இந்த காப்பகத்தை நடத்தி வருவது தெரியவந்தது. இதனிடையே காப்பக நிர்வாகிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த பேரூர் தாசில்தார் இந்துமதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலையில் சுற்றித்திரிந்தவர்களை கடத்தி வந்த மொட்டையடித்து, தாக்கியுள்ளனர். எனவே காப்பக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்றனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
6 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து பேரூர் தாசில்தார் அளித்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, தனியார் காப்பக நிர்வாகி ஜுபின்பேபி, அடைக்கல கரங்கள் அமைப்பு நிர்வாகி பி.என்.புதூரை சேர்ந்த சைமன் செந்தில்குமார் (44), பரலோகத்தின் பாதை டிரஸ்ட் நிர்வாகி சத்தியமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ் (54), புகலிடம் அமைப்பு நிர்வாகி சென்னையைச் சேர்ந்த செல்வின் (49), தர்மபுரி மீட்பு டிரஸ்ட் நிர்வாகி பாலச்சந்திரன் (36), விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி அருண் (36) ஆகிய 6 பேர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையில் பேசுதல், சிறை வைத்தல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
130 பேர் மீட்பு
மேலும் அந்த காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 130 பேர் மீட்கப்பட்டனர். இதில் 52 பேர் மட்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. மீதி உள்ளவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அரசு பதிவு பெற்ற காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்களை அவர்கள் அழைத்து வரப்பட்ட இடங்களிலேயே விடப்பட்டனர்.
வேலைக்கு செல்பவர்கள் பிடித்து செல்லப்பட்டார்களா?
போலீஸ் கமிஷனர் விளக்கம்
காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலர் கூறியதாவது:-
நாங்கள் கணபதி, கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள நடைபாதைகளில் தூங்கி எழுந்து கட்டிட வேலை மற்றும் ஓட்டல் வேலைகளுக்கு சென்று வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மாநகர போலீசாருடன் வந்த சிலர் எங்களை வலுக்கட்டாயமாக பிடித்து வேனில் ஏற்றி இந்த பகுதிக்கு அழைத்து வந்தனர். பின்னர் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் எங்கள் தலைமுடியை வெட்டி, மொட்டை அடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரை அவர்கள் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதனால் நாங்கள் பயத்தில் கூச்சல் போட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக திரிந்த யாசகர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மீட்கப்பட்டு காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். வேறு யாரையும் கட்டாயப்படுத்தி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து வருவாய் துறையினர் கூறும்போது, கோவை நகரில் சுற்றித்திரிந்த 130 பேரை, அட்டுக்கல்லில் உள்ள தனியார் காப்பகத்தில் 2 நாட்களுக்கு தற்காலிகமாக தங்க வைக்க அனுமதி பெற்று உள்ளனர். பின்னர் அவர்களை இங்கிருந்து வேறு காப்பகத்திற்கு அழைத்து செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார் என்று அவர்கள் தெரிவித்தனர்.