வாழப்பாடி அருகே கார் கவிழ்ந்தது: ஆசிரியை உள்பட 6 பேர் படுகாயம் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க சென்ற போது மகளுக்கு கால் முறிந்த சோகம்


வாழப்பாடி அருகே கார் கவிழ்ந்தது:  ஆசிரியை உள்பட 6 பேர் படுகாயம்  மருத்துவக்கல்லூரியில் சேர்க்க சென்ற போது மகளுக்கு கால் முறிந்த சோகம்
x

வாழப்பாடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவக்கல்லூரியில் சேர்க்க சென்ற போது ஆசிரியையின் மகளுக்கு கால் முறிந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

சேலம்

வாழப்பாடி,

மருத்துவக்கல்லூரியில் சேர..

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவிரிநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 52). இவர் மருந்து கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெகதா (42). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்த தம்பதிக்கு அனுஸ்ரீ (18) என்ற மகளும், திருப்புகழ் (11) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் அனுஸ்ரீ நீட் தோ்வில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அனுஸ்ரீயை அரியலூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ப்பதற்காக லட்சுமிபதி, தனது மனைவி, மகன் மற்றும் உறவினர் நாராயணன் ஆகியோருடன் நேற்று அதிகாலை போச்சம்பள்ளியில் இருந்து ஒரு காரில் புறப்பட்டனர். காரை அதே பகுதியை சேர்ந்த ஓம்சக்தி(28) என்பவர் ஓட்டினார்.

கார் கவிழ்ந்தது

சேலம் மாவட்டம், வாழப்பாடி வழியாக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் நோக்கி கார் சென்றது. வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லட்சுமிபதி, ஜெகதா திருப்புகழ், அனுஸ்ரீ, கார் டிரைவர் ஓம்சக்தி, நாராயணன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்து காருக்கு அடியில் சிக்கி தவித்தனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்ட இப்பகுதி பொதுமக்கள், காருக்கு அடியில் சிக்கித்தவித்த 6 பேரையும் மீட்பு வாகனம் மூலம் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை கதறல்

முன்னதாக கார் விபத்துக்குள்ளான நிலையில் மகள் அனுஸ்ரீயின் கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதே என்றும், 3-ந் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்க முடியாவிட்டால் அவளது டாக்டர் கனவு நிறைவேறுமா? என தந்தை கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

விபத்தில் சிக்கி கால்முறிந்த நிலையில் அனுஸ்ரீயின் டாக்டர் கனவு பலிக்க தமிழக முதல்-அமைச்சர் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story