விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் உள்பட 6 பேர் கைது
வாழப்பாடி:-
வாழப்பாடி அருகே சின்னகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி மாரியம்மன் கோவிலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில ஒருதரப்பினரான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் முல்லைவாணன் கொடுத்த புகாரில் சாதி பெயரை சொல்லி திட்டியதாக புதுப்பட்டி மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செல்வா (வயது 53), அவரது அண்ணன் ராஜாமணிக்கம் (67) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அதே போல மற்றொரு தரப்பை சேர்ந்த, வாழப்பாடி பகுதியில் ஆட்டோமொபைல் கடை நடத்தி வரும் செல்வா (53) என்பவர் புகார் கொடுத்திருந்தார். அதில் தன்னை கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்ததாக அவர் கொடுத்த புகாரின் பேரில் முல்லைவாணன், அறிவழகன், ராமமூர்த்தி, விஜய் ஆகிய 4 பேரை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். இருபிரிவினர் மோதல் வழக்கில் வழக்கு பதிவு செய்த அன்றே இரு தரப்பிலும் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.