அரிவாள், கத்தியுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது


அரிவாள், கத்தியுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது
x

தஞ்சையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்
தஞ்சை மேம்பாலம் அருகே ரெயில்வே குட்ஷெட் பகுதியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றித்திரிவதாக தஞ்சை மாநகர தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

உடனே சுதாரித்து கொண்ட போலீசார், அவர்களை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் தஞ்சை விளார் சாலையில் உள்ள பூக்கார தெருவை சேர்ந்த சீனிவாசன்(வயது 26), தினேஷ்(25), அசோக்(20), மணிகண்டன்(21), நவீன்(20), வ.உ.சி. தெருவை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 6 பேர் என்பது தெரிய வந்தது.

தியேட்டரில் தகராறு

இவர்களுக்கும், இன்னொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் சமீபத்தில் தஞ்சையில் உள்ள ஒரு தியேட்டரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்களை தாக்குவதற்காக அரிவாள், கத்திகளுடன் அவர்கள் காத்திருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், மணிகண்டன், சீனிவாசன், அசோக், நவீன், இன்னொரு மணிகண்டன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அரிவாள், கத்திகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Next Story