மூதாட்டியை தாக்கி 6½ பவுன் நகை பறிப்பு
கொள்ளிடம் அருகே மூதாட்டியை தாக்கி 6½ பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமம் அண்ணா சாலை தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி இருதாயி (வயது 70). கணவரை இழந்த இவர் கீற்று கயிறு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மகள், மகன்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வசித்து வருகின்றனர். கடையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இருதாயி தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உள்ளே படுத்து உறங்கி உள்ளார். நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த இருவர் இருதாயி முகத்தை துணியை போட்டு மூடிவிட்டு அவரை தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர். காயங்களுடன் மயங்கிய மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் தோடு உள்ளிட்ட 6½ பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். காலையில் அவ்வழியே சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.