6 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
மயிலாடுதுறை அருகே மூங்கில் மரத்தில் ஏற்பட்ட தீப்பொறியால் அருகில் இருந்த 6 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியது. மேலும் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் 3 ஆடுகள் இறந்தன.
மயிலாடுதுறை அருகே மூங்கில் மரத்தில் ஏற்பட்ட தீப்பொறியால் அருகில் இருந்த 6 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியது. மேலும் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் 3 ஆடுகள் இறந்தன.
மூங்கில் மரத்தில் தீப்பொறி
மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரம் வடக்கு தெருவில் லட்சுமணன் என்பவரது வீட்டின் பின்பகுதியில் மூங்கில் மரங்கள் (கொத்து) உள்ளது. நேற்று மதியம் இந்த மூங்கில் மரக்கொத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் காற்றின் காரணமாக மூங்கில் மரத்திலிருந்து தீப்பொறி பரவி அங்கிருந்த குடிசை வீடுகளுக்கு பரவியது. இதனால் குடிசை வீடுகள் தீப்பிடித்து எறிய தொடங்கியது.
இதில் 6 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர், 2 தீயணைப்பு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மூங்கில் மரங்களில் ஏற்பட்ட தீயினையும் கட்டுக்குள் கொண்டு வந்து தீ பரவாமல் தடுத்தனர்.
சிலிண்டர் வெடித்து சிதறியது
இந்த தீவிபத்தில் மகாலட்சுமி, சாந்தி, பாலசுப்பிரமணியம், மல்லிகா ஆகியோர் வீடுகள் முழுமையாகவும், செல்லக்கிளி, வசந்தா ஆகியோரின் வீடுகள் பகுதியாகவும் தீயில் எரிந்து கருகின. இதில் சாந்தி என்பவரது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் அவர் வீட்டில் வளர்த்து வந்த 3 ஆடுகளும் தீயில் கருகி இறந்தன. மேலும் மகாலட்சுமி என்பவர் வீட்டில் தனது மகள் திருமணத்திற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன. மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மூங்கில் மரத்தின் அடியில் கிடந்த குப்பைகளை யாரேனும் கொளுத்தியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த ராஜகுமார் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி, தாசில்தார் மகேந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.