தூத்துக்குடியில் ஒரே நாளில் 6 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு


தூத்துக்குடியில் ஒரே நாளில் 6 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 6 கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம்

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே தனியார் வணிக வளாகம் அமைந்து உள்ளது. இந்த வணிக வளாகத்தில் முதல் தளத்தில் தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த பெருமாள் என்பவர் ஆட்டோ கன்சல்டிங் கடை நடத்தி வருகிறார். இதே போன்று பல் மருத்துவமனை, ஸ்டுடியோ உள்பட பல்வேறு கடைகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அலுவலகம் உள்ளிட்டவை அமைந்து உள்ளன. நேற்று காலையில் பெருமாள் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் கடையின் உள்ளே சென்று பார்த்தார்.

திருட்டு

அங்கு அவர் வைத்து இருந்த சுமார் ரூ.49 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதே போன்று அருகில் இருந்த ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஒரு கேமிராவை மர்ம ஆசாமி திருடி சென்று உள்ளார். மற்ற 4 கடைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது. ஆனால் எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story