பேன்சி கடையில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய 6 வாலிபர்கள் கைது
முன்விரோதம் காரணமாக பேன்சி கடையில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பேன்சி கடை
புதுக்கோட்டை பெரியார் நகரில் பேன்சி கடை நடத்தி வருபவர் பாலமுருகன். இவரது கடையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையில் கோபாலகிருஷ்ணன் இருந்த போது ஒரு கும்பல் வந்து அவரை தாக்கியதோடு, கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பொருத்தப்பட்டிருந்த காட்சியை பார்வையிட்டு விசாரித்தனர்.
6 பேர் கைது
இந்த நிலையில் கடையில் பொருட்களை நொறுக்கி அங்கிருந்த நபரை தாக்கிய பெரியார் நகரை சேர்ந்த வினோஜன் (வயது 35), எம்.கே.ஜே. நகரை சேர்ந்த ரஞ்சித் (27), மாணிக்கம் நகரை சேர்ந்த கவுதம்வர்மன் (20), பூங்கா நகரை சேர்ந்த அரவிந்தன் (27), ராஜா (36), கம்பன் நகரை சேர்ந்த ராஜசேகர் என்கிற ராஜா (20) ஆகிய 6 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர். 6 பேரும் முன்விரோதம் காரணமாக கடையில் இருந்த நபரை தாக்கி, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.