வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை?


வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை?
x

சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேவிநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில் தேவிநகர் உள்ளது. இந்த நகரில் வசித்து வரும் பத்மநாபன், தனசேகரன், சிவக்குமார், சிவசிதம்பரம் ஆகியோர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

இதை நோட்டமிட்ட மர்ம கும்பல் அதிகாலை நேரத்தில் பூட்டி இருந்த 4 வீடுகளிலும் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பீரோக்களை உடைத்து நகைகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதில் பத்மநாபன் என்பவர் வீட்டில் மட்டும் 60 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனதாக கூறப்படுகிறது. வெளியூரில் இருந்து பத்மநாபன் சிவகாசி திரும்பிய பின்னர் தான் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

தனியார் வங்கி

இதேபோல் தனசேகரன் வீட்டில் 2 கிராம் தங்கம் மற்றும் ரூ.2,800 ஆகியவை திருட்டு போய் உள்ளது. அதேபோல் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வரும் சிவக்குமார் வீட்டில் வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் மட்டும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே பகுதியில் வசித்து வரும் சிவசிதம்பரம் என்பவரின் வீட்டில் 2 கிராம் நகை மட்டும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

மறுக்கும் அதிகாரிகள்

இந்த கொள்ளை சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசாரிடம் கேட்ட போது சம்பவம் குறித்து எந்த உறுதியான தகவலும் தெரிவிக்க மறுத்து விட்டனர். சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே நடைபெற்ற 3 கொள்ளை சம்பவங்களில் இதுவரை உண்மை குற்றவாளிகள் அடையாளம் காணமுடியாத நிலையில் தற்போது மேலும் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.


Next Story