ஸ்கூட்டரை எடுத்து சென்ற தனியார் வங்கிக்கு ரூ.60 ஆயிரம் நஷ்ட ஈடு: நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்கூட்டரை எடுத்து சென்ற தனியார் வங்கிக்கு ரூ.60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மணத்தட்டையை சேர்ந்தவர் சிவபெருமாள். இவர் ஸ்கூட்டர் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள தனியார் வங்கி மூலம் குறிப்பிட்ட தொகையை செலுத்தினார். பின்னர் மீதி தொகையை 24 மாதங்களுக்கு தவணைத்தொகை செலுத்தும் வகையில் ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். இந்நிலையில் சிவபெருமாள் தவணைத்தொகையை சரியாக செலுத்தாமல் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த வங்கி ஊழியர்கள் சிவபெருமானின் ஸ்கூட்டரை எடுத்து சென்று விட்டனர். இதனையடுத்து முன் அறிவிப்பு ஏதுமின்றி தனது ஸ்கூட்டரை எடுத்து சென்று விட்டதாகவும், அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. அதனால் மேற்படி வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனம் வழங்க வேண்டும். இதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிவபெருமாள் புகார் கொடுத்தார். அதன்பேரில், ஆணையத்தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.60 ஆயிரம் வழங்குவதுடன், வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து 7.5 சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர்.