கடந்த 5 மாதங்களில் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு 600 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது


கடந்த 5 மாதங்களில்  கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு 600 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது
x

கடந்த 5 மாதங்களில் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு 600 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் அணை

கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இ்தனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்பட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, ஜூன் மாத இறுதியில் அவைகள் நிரம்பும் தருவாயை எட்டின.

இதன் காரணமாக ஜூலை மாதத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது.

மேட்டூர் அணைக்கு இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து ஜூலை மாதம் 16-ந் தேதி இந்த ஆண்டில் முதல் முறையாக 120 அடியை எட்டி அணை நிரம்பியது. இந்தநிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.

2-வது முறையாக நிரம்பியது

அணை நிரம்பி 70 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 118 அடியாக குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அடுத்த ஒரு சில நாட்களிலேயே அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டி, இந்த ஆண்டில் 2-வது முறையாக அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் நீர்வரத்துக்கு ஏற்றவாறு அதே அளவில் தண்ணீர் ெவளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் 120 அடியாக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரிக்கும் போது, 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

600 டி.எம்.சி. தண்ணீர்

இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்றும் இதே அளவு நீர்வரத்தும், வெளியேற்றமும் நீடித்தது.

இவ்வாறு மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும், வெளியேற்றமும் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் முடிய கடந்த 5 மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு 600 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி ஆகும்) தண்ணீர் வந்துள்ளது. இதில் பாசன தேவை மற்றும் உபரிநீராக 590 டி.எம்.சி. தண்ணீர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story