600 டன் குப்பைகள் அகற்றம்
ஆயுதபூஜையையொட்டி திருப்பூரில் குவிந்த வாழைக்கன்று உள்ளிட்ட குப்பைகள் 600 டன் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்
ஆயுதபூஜையையொட்டி திருப்பூரில் குவிந்த வாழைக்கன்று உள்ளிட்ட குப்பைகள் 600 டன் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுதபூஜை கொண்டாட்டம்
பனியன் தொழில் நகரான திருப்பூரில் ஆயுதபூஜை தொழில் நிறுவனங்களில் கொண்டாடப்பட்டது. சில நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் நேற்று முன்தினம் கொண்டாடினார்கள். எந்திரங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை சுத்தம் செய்து மின்விளக்கு, வண்ண காகிதங்களை கொண்டு அலங்காரம் செய்து, மாவிலை, வாழைக்கன்று, கரும்பு கட்டி, சாமி படங்களுக்கு படையலிட்டு வணங்கினார்கள்.
இதற்காக மாநகரின் கடை வீதிகளில் மாவிலை, வாழைக்கன்று, கரும்பு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தது. நேற்றுமுன்தினம் மாலை வரை வியாபாரம் களைகட்டியது.
அதன்பிறகு வியாபாரிகள் கொண்டு வந்த வாழைக்கன்றுகள், மாவிலை உள்ளிட்டவை விற்பனையாகாமல் மீதம் இருந்தவற்றை அங்கேயே போட்டுவிட்டு புறப்பட்டனர். இதன்காரணமாக பல இடங்களில் மலைபோல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. சில இடங்களில் வெள்ளை பூசணிக்காயை அப்படியே விட்டு சென்றனர். முக்கிய கடைவீதிகளில் இதுபோன்ற குப்பைகள் அதிகம் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உருவானது.
600 டன் குப்பைகள் அகற்றம்
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, சுகாதார பணியாளர்களை கொண்டு வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்ட குப்பைகளை சிறப்பு ஏற்பாடு செய்து உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் இரவு முதல் இந்த பணி நடைபெற்றது. நேற்று காலை மீண்டும் சுகாதாரப்பணியாளர்கள் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். பொக்லீன் மூலமாக மொத்தமாக லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டது.
வழக்கமாக நாளொன்றுக்கு 600 டன் குப்பை மாநகராட்சி பகுதியில் இருந்து அகற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, நேற்று மாலை வரை வழக்கமான குப்பையை விட கூடுதலாக 600 டன் குப்பை அகற்றப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நேற்று இரவும் குப்பை அள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். அதன்படி ஆயுதபூஜைக்காக கொண்டு வரப்பட்ட வாழைக்கன்று, மாவிலை, கரும்பு உள்ளிட்ட குப்பைகள் மட்டும் 600 டன் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.