கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்
கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி தொடங்கி 61 நாட்கள் நீடிக்கிறது.
தென்தாமரைகுளம்,
கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி தொடங்கி 61 நாட்கள் நீடிக்கிறது.
தடைக்காலம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அழிந்து விடும் என்று கருதி 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டு கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க வருகிற 15-ந் தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது.
சின்னமுட்டம்
இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படும். இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.
அதே நேரத்தில் வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். இவர்களின் வலையில் குறைவாக மீன்களே கிடைப்பதால் இந்த இரண்டு மாத காலமும் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது.