குரூப்-4 தேர்வை 61 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள்


குரூப்-4 தேர்வை 61 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள்
x

நெல்லை மாவட்டத்தில் நாளை 230 மையங்களில் நடக்கும் குரூப்-4 தேர்வை 61 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள். இதையொட்டி தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நாளை 230 மையங்களில் நடக்கும் குரூப்-4 தேர்வை 61 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள். இதையொட்டி தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், அம்பை, சேரன்மாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய தாலுகாக்களில் 191 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 230 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 61 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள்.

தேர்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்வை சுமுகமாக நடத்த ஒவ்வொரு தாலுகாவிற்கும் தலா ஒரு உதவி கலெக்டர் வீதம், 8 உதவி கலெக்டர்களும், தேர்வெழுதுவோரை கண்காணிக்க 230 ஆய்வு அலுவலர்களும், 11 பறக்கும்படை அலுவலர்களும் தேர்வு பணிகள் மேற்கொள்ள தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 59 சுற்றுக்குழு அலுவலர்களும், தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்திடும் வகையில் 238 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வழிமுறைகள்

தேர்வெழுத அதிக மாணவர்கள் வர இருப்பதால் தேர்வு மையங்களில் கொரோனா தொற்றின் காரணமாக சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், உதவி இயக்குனர் (ஊராட்சி), (பேரூராட்சி) ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வருவதுடன் கொரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நெல்லை மாநகர பகுதியில் உள்ள தேர்வு மையங்களில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ நேரடி மேற்பார்வையில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story