619 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 619 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
காலை உணவு திட்டம்
அரசு தொடக்கப் பள்ளி மாணவ -மாணவிகளின் இடைநிற்றலை குறைத்து கிராமப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் கல்வியை அவசியம் பெற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்னும் சிறப்புமிகு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு தரமான கல்வியை ஆர்வமுடன் கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
மேலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான சமையற்கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கப்பட உள்ளது.
619 பள்ளிகள்
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 280 ஊராட்சிகளில் இயங்கி வரும் 541 தொடக்கப் பள்ளிகள், 5 நகராட்சிகளில் இயங்கிவரும் 35 தொடக்கப் பள்ளிகள், 8 பேரூராட்சிகளில் இயங்கி வரும் 34 தொடக்கப் பள்ளிகள் என மொத்தமாக 610 தொடக்கப் பள்ளிகளில் பயின்று வரும் 35,619 மாணவ- மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆற்காடு நகராட்சியில் ஏற்கனவே 9 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 619 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.