19 பேரிடம் ரூ.62½ லட்சம் மோசடி


19 பேரிடம் ரூ.62½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 13 May 2023 1:30 AM IST (Updated: 13 May 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் போலியாக ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி குறைந்த விலைக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி 19 பேரிடம் ரூ.62½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் போலியாக ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி குறைந்த விலைக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி 19 பேரிடம் ரூ.62½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

குறைந்த விலையில் வீட்டுமனை

கோவை போத்தனூரை சேர்ந்தவர் எல்சன் கே ஜோ (வயது 30). ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் சமூக வலைத்தளத்தில் குறைந்த விலைக்கு வீட்டுமனை விற்பனைக்கு இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலை பார்த்தார்.

உடனே அவர், அதில் உள்ள முகவரியை தொடர்பு கொண்டார்.

பின்னர் அவர், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஒண்டிப்புதூரை சேர்ந்த சந்திரன் என்ற அன்பு சந்திரன் (55), பங்குதாரர்கள் சரவணகுமார், நாகேந்திரன் மற்றும் ஊழியர்கள் சைனி தாமஸ், பிரேம நந்தினி ஆகியோரை அலுவலகத்திற்கு சென்று நேரில் சந்தித்தார்.

முன்பணம் கொடுத்தார்

அவர்களிடம் புதிதாக கட்டிய வீட்டுமனை விற்பனைக்கு உள்ளதா? என எல்சன் கே ஜோ கேட்டார். அதற்கு அவர்கள் சூலூர் கண்ணம்பாளையத்தில் குறைந்த விலையில் ரூ.31 லட்சத் துக்கு வீடு இருப்பதாக நேரில் அழைத்து சென்று காண்பித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த வீட்டை வாங்க விரும்பிய எல்சன் முன் பணமாக ரூ.25 ஆயிரம் கொடுத்தார். சிறிது நாட்கள் கழித்து ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்தை அந்த நிறுவனத்தினரிடம் கொடுத்தார். அதற்கு ஒரு கிரைய ஒப்பந்தம் தயாரித்து கொடுத்தனர்.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் வீடு வாங்கி கொடுக்காமலும், பத்திரப் பதிவு செய்து கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இது குறித்து எல்சன் கே ஜோ கேட்டபோது அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்து வந்தனர்.

இதனால் தான் மோசடிக்கு ஆளானதால் அதிர்ச்சி அடைந்த அவர், மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி வழக்குப் பதிவு செய்து சந்திரன் என்ற அன்பு சந்திரனை கைது செய்தார்.

ரூ.62½ லட்சம் மோசடி

விசாரணையில், அவர் மற்றும் பங்குதாரர்கள், ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து போலியான ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி 19 பேரிடம் குறைந்த விலைக்கு வீட்டுமனை இருப்பதாக கூறி ரூ.62 லட்சத்து 47 ஆயிரம் வரை மோசடி செய்ததும் தெரிய வந்தது. கைதான அன்பு சந்திரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story