ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 67 பேர் கைது
ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து, பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து, பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில் மறியலுக்கு முயற்சி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர்
என்.கே.பகவதி தலைமை தாங்கினார். பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தொடங்கிய போராட்டத்தை கோவை தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்கிருந்து காங்கிரசார் கட்சி கொடியை கையில் ஏந்தி நடைபயணமாக ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ரெயில் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
இதற்கிடையே சம்பவம் அறிந்து ஏற்கனவே ரெயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட ரெயில் நிலையத்திற்குள் வந்த காங்கிரஸ் கட்சியினரை உள்ளே விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
67 பேர் கைது
இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட 67 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். கைதானவர்களை பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் பொள்ளாச்சி தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், கொ.ம.தே.க. மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது